இனம், மொழி, மதம், தேசம், விருப்பு, வெறுப்பு கடந்து எழுதப்படுவது மட்டுமே உண்மையான வரலாறு - ஜெ. கோபிநாத் Myspace Scrolling Text Creator

பறை மேளக்கூத்தும்; அதன் இன்றைய நிலையும்

மீன்பாடும் தேனாடாம்  மட்டுமாநகரின் பிரசித்தம் வாய்ந்த அரங்க கலை வடிவங்களில் பறைமேளக் கூத்து தனித்துவமானது. இக்கலையானது மட்டக்களப்பு பிரதேசத்தில் பறையர் சாதியினர் வாழ்கின்ற கோளாவில், களுதாவளை, புன்னைக்குளம்,
ஆரையம்பதி, கல்முனை, வெல்லாவெளி, பிலாலிவேம்பு, மாவடிவேம்பு ஆகிய
பகுதிகளிலே சிறப்பாக பேணப்பட்டுக் கொண்டு வருகின்றது.
பறையர் சமுகத்தின் பண்பாட்டினைப் பேணி வருகின்ற பறைமேளக் கூத்தினை வாழும் கலையாக தக்க வைத்துக் கொள்வதே கலைஞர்களின் கடப்பாடாகும். மட்டக்களப்பில் உள்ள பறையர் சமுகம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடையது. பறையர்கள் கிழக்கிலங்கையில் தென்று தொட்டு இருந்து வருகின்ற தமிழ்த்தொல்குடிகளில் ஒரு பிரிவினராவார். பறையர்கள் வரலாறு பற்றி இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. அதாவது பறையர்கள் தொன்று தொட்டு இருந்து வருகின்ற தமிழர்கள் தொல்குடி என்றும் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்த மேட்டுமையினர்களின் படையெடுப்புக்களின் போது இடையில் வந்தனர் என்பதுவுமாகும்.
      ஈழத்தமிழர்களது பறையர்களது சமுகம் தொல்குடியினர்களாக இருந்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவிலிருந்து வந்த படையெடுப்புக்கள் அவர்களைக் கிளைப்படுத்தியிருக்க வேண்டும். எனவும், இதன் காரணமாக பறையர்கள் சமுகத்தினர் சிறைகளாக இருந்து தங்;களது எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்திருக்கின்றனர். தமிழ் நாட்டிலும் மேட்டுமையினருக்கு கீழ்சாதியினர் தொண்டூழியம் செய்து வந்திருக்கின்றனர். தமிழ் நாட்டில் பிராமணர், வெள்ளாளர், முக்குகர், கரையார், கைவினைஞர்கள் என சாதிப் படிநிலையினைக் காணலாம். இதில் உயர் சாதியாக பிராமணரையும், இடைச்சாதிகளாக வெள்ளாளர், முக்குகர், கரையார் என்போரையும், கீழ் சாதியாக கைவினைஞர்களையும் குறிப்பிடலாம். இவர்களில் மட்டக்களப்பிற்கு வெள்ளாளர்களும் முக்குகர்களும் கரையார்களும் வந்திருக்கின்றனர். இவர்களது வருகையுடன் தங்களது பணிவிடைகளைச் செய்ய கீழ் சாதியினரையும் கொண்டு வந்திருக்க வேண்டும். இதன்படி பறையர்களும் அவர்களுக்கு சேவகம் செய்து வந்திருப்பதால் பறையர்களும் இந்த மேட்டுமையினரின் வருகையுடன் வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இத்தகைய கருத்து மேலும் பல சந்தேகங்களை எழுப்புவதால் மேலும் இவை ஆராயப்பட வேண்டியவையாகும். ஈழத்தமிழர்களது தெல்குடிப் பாராம்பரியத்திற்கு உரியவர்களாயினும் அல்லது இந்தியாவிலிருந்து வந்தவர்களாயினும் இரண்டு நிலைகளிலும்; கலந்து வளர்ந்த வந்தவர்களாயினும் பறையர் சமுகத்திற்கு மட்டக்களப்பில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் உண்டு.
மேட்டிமைச் சாதியினரிடம் இருப்பது போன்று பறையர்கள் சாதியினருக்கும் குடிமுறைகள் உள்ளன. இதனை கலிங்க மாகோன் பட்டயம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
''வள்ளுவம் தொட்டி தோட்டி
வாஞ்சொலி சத்திரியன்
துள்ளும் வெட்டியானந்த னேளாய்ச்
சுகித்திட வகுத்தவாறே
பள்ளுடன் கலந்தாலுங்கள் வரன் முறை
குறையு மென்று வள்ளலார்
காலிங்க மாகோனும் வகுத்திட்டாரே''
        இதில் பறையர்கள் குடிமுறைகள் கூறப்பட்டு இந்தக்குடி முறைகள் பள்ளர்களுடன் கலந்ததால் பறையர்கள் வரன்முறை குறைந்து விடும் என உரைக்கின்றது.
          பறையர்கள் சமுகத்தின் வரலாறு திருப்படைக் கோயில்களின் பழமையுடன் தொடர்புபடுத்திப் பார்கப்பட வேண்டியது. தொல்குடிகளாக இருந்த பறைமேள இசைக்கலைஞர்கள் சிறைகளாக்கப்பட்டு திருப்படைக் கோயில்களுக்கு சேவனை செய்யவேண்டும் எனப் பணிக்கப்படுகிண்றனர். இதனைப் பேணுவதால் மட்டக்களப்பில் திருப்படைக்கோயில்கள் முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் காணப்படுகின்றது. இதில் திருவிழா முடிந்த பின்னர் கஞ்சிமுட்டி கூறுதல் நிகழ்வு இடம் பெறும். இதில் ஒவ்வொரு சாதியும் தங்களது தலைமுறைகளைக் கூறி குல விருதுகளை பெற்றுக் கொள்வர். இந்தநிகழ்வானது சாதியில் குறைந்த பறையர்களுக்கும் உண்டு. பறையர்கள் குலவிருது சின்னப்பறையாகும் இதனை பறையர்கள் தங்களது தலைமுறையைக் கூறிப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வு சாதியத்தினைப் பேணுவதற்காக அதனை ஆலயங்கள் நிலை நிறுத்துவதற்காகவும், வலிமை சேர்ப்பதற்காகவும் அமைந்து விடுகின்றன. இந்த சாதியத்தினை நிலை நிறுத்துகின்ற கடவுளர்களையும் பறையர்கள் சமுகம் நிராகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சாதியத்திலிருந்து விடிவினைப் பெறமுடியும்.
             பறைமேளக் கூத்தின் தோற்றப் பின்புலத்தினை எடுத்து நோக்குவோமாயின் ஆரம்பகாலங்களில் கிராமங்களுக்கு வருகின்ற பெரியவர்களை வரவேற்பதற்கும், செய்திகளை எடுத்துச் சொல்வதற்கும் பறைஅறைதல் எனும் செயற்பாடு இருந்தது. இவற்றினூடாக ஆட்டங்களையும் அபிநயங்களையும் உள்வாங்கி பறைமேளக்கூத்தாக உருவாக்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இப்பறை மேளக்கலையானது ஆலயங்களிலே ஆலயத்தாளம், அபிஷேகத்தாளம், அழைப்புத்தாளம், சுற்றாலைத்தாளம், பெரியபூசைத்தாளம் என்பவற்றிற்கும் மரணத்திலே ஆரம்பத்தாளம், தெரியப்படுத்தும்தாளம், எடுத்துச்செல்லும்தாளம், சந்திகூடும்தாளம், என்பவற்றின் உடாகவும் ஆடம்பரத்திற்காக வரவுத்தாளம், கோணங்கித்தாளம், இராசதாளம், பல்லாக்குத்தாளம், நாலடித்தாளம், ஆறடித்தாளம், எட்டடித்தாளம், தட்டுமாறும்தாளம் என இவ்வகைத்தாளங்களுக்கு ஏற்ப பறைமேளம் இசைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
             அடுத்து பறைமேளக்கூத்தினுடைய ஆற்றுகை பற்றி நேக்குவோமாயின் இருவர் அல்லது மூவர் பெரும்பறைகள், சிறுபறைகளைத் தாங்கியபடி ஒருவரை ஒருவர் எதிரெதிரே பார்தபடி ஆடி பறை ஒலி எழுப்புவர். வேறொருவர் சொர்ணாலி வாசிப்பார். இக்கூத்திற்கு தலமை தாங்குபவரை மூப்பனார் என அழைப்பர். மூப்பனாரின் வழிகாட்டலிலே இக்கூத்தின் ஆற்றுகை இடம்பெறும். அவர்களது அரங்க அளிக்கை என்பது வெறும் வெட்ட வெளியில் நடத்தப்படும். உடையென்பது அவர்களது அழகியலை வெளிப்படுத்தாது. அவர்களது அரங்க ஆற்றுகையின் போது உடை ஒப்பனை செய்யமுடியாது. (சமூகத்தில் அன்று அவர்களது குறிகளை மறைத்துக்கொள்ள மட்டுமேஅங்கிகாரம்; இருந்தது.)அவர்கள் பொருளாதாரத்தில் குறைந்திருந்ததன் காரணமாக உடை, ஒப்பனை என்பன சாதாரணமாகவே அமைந்திருந்தது. பறையிசை சந்தமும் ஓசை ஒழுங்கின் மூலமும் இனிமையான இசையினை வழங்குகின்றது. இந்த இனிமையான இசையோடு இந்த இசைக்கேற்ப ஆடுவதுமிணைந்தே பறைமேளக் கலையாகின்றது. நிகழ்துகையை முக்கியமாகக் கொண்டு உள்ள கலைவடிவம் இதில் அரங்கக்கலை அம்சங்கள் இரண்டாம் பட்சமானது. பறைமேளம் இசைக்கத் தெரிந்தவர்களும், பறைமேள ஆட்டவடிவங்கள் தெரிந்தவருமே அரங்க ஆற்றுகை செய்வதற்கு பொருதத்தமானவர்கள். இவர்களுக்குத் துணையாக சொர்ணாளி, சின்னப்பறை இசைக்கப்படும் இவற்றின் மூலமே பறை மேளக்கலையின் அழகியல் வெளிப்படும். இவற்றோடு இணைந்ததாகவே பங்குபற்றுதல், ஒன்றிணைதல், பரஸ்பரவுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளல் போன்றவற்றிற்கு பறைமேளக்கூத்து தனித்துவமானதோர் இடத்தினை பெறுகின்றது.
                         பறைமேளக்கூத்தின் ஆற்றுகையாளர்களாக விளங்கும் பறையர் சாதியினரிடையே ஏற்படுகின்ற தாழ்வு மனப்பாங்கும், சாதிமுறைமைக்குள் பறைமேளக்கலை இருப்பதுவும் இக்கூத்து மருவி வருகதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். அத்தோடு இளைஞர்கள் தாங்கள் பறைமேளத்தை பழகினால் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்காது என்று எண்ணுவதும், ஊர்களிலே பறைஅடிப்பதற்கு தடைவிதிப்பதும், பறையர்    சமூகத்தினரை ஊர்களில் ஒதுக்கி வைப்பதும் இக்கூத்து மருவிவருவதற்கான காரணங்களாக குறிப்பிடலாம் போர்சூழலும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களும், இதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட அபரீதமான மன உளைச்சல்களும்  கலைகளைப் பாதித்து நின்றது. இந்நிலையும் பறைமேளக்கூத்தின் வீழ்ச்சிக்கு ஓர் காரணம் என்று குறிப்பிடலாம்.     
                                   மேற்கூறப்பட்ட காரணங்களினால் பறைமேளக்கூத்து வீழ்ச்சியுற்ற நிலை இருந்தாலும் இன்றும் சடங்குக் கோயில்களிலே பறை அடிச்சத்தத்திற்கு ஏற்ப தெய்வங்கள் உருவேறி ஆடுகின்ற தன்மை காணப்படுகின்றது. இத்தன்மையானது பறைமேளத்தின் தனித்துவம் என்றே குறிப்பிடவேண்டும். அதேபோன்று மரணவீடுகளிலும் பறை அடிக்கப்படுகின்ற தன்மை காணப்படுகின்றது. இப்பண்பாடானது இன்று மருவிக்கொண்டு வருகின்றது. இத்தன்மைகளிலிருந்து பறைமேளக்கலையை வாழும்கலையாக தக்கவைத்துக் கொள்ளுதல் வேண்டும். அதேபோன்று பறைமேளம் பறையர் சாதியினரது பாரம்பரிய கலை வடிவமாக இருந்தாலும் அது தொழில்முறைசார் கலையாகவும், அவர்களது வாழ்வியலை வளப்படுத்திச் செல்கின்றது. பறைமேளக்கலையை சமுகத்தில் இருந்து ஒதுக்கினால் அவர்களது குடும்ப நிலையும் பாதிக்கப்படும். இவ்வாறான சவால்களை நீக்கும் விதத்தில் பறை மேளக்கூத்தினை வளர்த்தெடுக்க வேண்டும்;.
                                                                      இன்றைய அரங்கச்சூழலில் பாரம்பரியங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் பறைமேளக்கூத்தினுடைய மரபுத்தன்மைகள் மாற்றமடையாமல் ஆற்றுகைகள் இடம் பெறுதல் வேண்டும். ஆனால் இன்று படித்தோர் மட்டங்களிலே நவீனத்துவ சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு பாரம்பரியக் கலைகளை மாற்றுவது ஒரு மனம் வருந்தத்தக்க செயற்பாடாகவே அமைகின்றது. கடந்த 2011 பங்குனி 25,26,27ஆம் திகதிகளிலே யாழ்ப்பாணத்திலே இடம் பெற்ற இசை விழாவிலே பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ்விழாவில் பறைமேளக்கூத்தானது மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக நாடகத்துறை மாணவர்களால் அளிக்கை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சொர்ணாலி என்றவாத்தியக்கருவி வாசிக்கப்படவில்லை. அத்தோடு உடையமைப்பு பரதநாட்டிய பாணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இதன் ஆட்டமுறைகள் கூத்துடனும், கண்டியநடனங்களுடனும் தொடர்பு பட்டனவாகவே இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் பாரம்பரியத்தன்மைகளினை மீறுவதாகவே இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளும் பறைமேளக்கூத்திற்கு சவாலாகவே அமைகின்றது.
                  மட்டக்களப்பு பிரதேசத்தினைப்  பொறுத்தவரையில் பாரம்பரியக் கலைகளினை முன்னெடுப்பதில் பிரதேச செயலகத்திற்கு பங்குண்டு. கடந்த 2010ஆம் ஆண்டிலே இப்பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மக்கள் கலை இலக்கிய விழாவில் பறைமேளக்கூத்தும் ஆடப்பட்டது. இது களுதாவளைப் பிரதேசத்து பரசுராமன் மூப்பனாரின் மாணவர்களால் ஆடப்பட்டதாகும். இவ்வாறான கலைச்செயற்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும். அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் 2001இ;ல் நடாத்திய நாடக தினவிழாவில் பறைமேளக்கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டது சிறப்பான அம்சமாகும்.
              பறைமேளக்கூத்தில் பாண்டித்தியம் பெற்ற மூப்பனார்கள் இளம் சமுதாயத்தினருக்கு பறைமேளக்கலை தொடர்பான அறிவு புகட்டுதலையும், எதிர்கால கலைச் செழுமை பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுதல் வேண்டும். இவ்வாறு எதிர்காலத்தில் பறைமேளக்கலையை வாழும் கலையாக வளர்த்தெடுக்க மூப்பனார்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகும். அதேபோன்று சமுக உருவாக்கமானது சாதி ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சாதிவேறுபாடுகளை மதிக்கக்கூடியதாக இருக்குமாயின் பறையர்களுக்கு நிலையான சமுக அந்தஸ்து வழங்கப்படும். இத்தோடு பறை மேளக்கலைஞர்களையும், மூப்பனார்களையும் வருடாவருடம் கௌரவிப்பதன் மூலமாகவும் பறைமேளக்கூத்தினை வளர்த்தெடுக்கலாம்.
            மட்டக்களப்பு பிரதேசத்தின் பாரம்பரியக் கலைகள் பேணப்படவேண்டிய தேவைகள் இருப்பதனால் இதனை உணர்ந்து வளர்ந்து வரும் இளம் சமுதாயம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இருப்பினும் பறைமேளக்கூத்தினை அதன் பாரம்பரியத்தன்மையிலிருந்து விலகிச் செல்லவிடாது இன்றைய கல்வித்திட்டங்களிலும், பல்கலைக்கழக மட்டங்களிலும் அறிமுகப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது ஆற்றுகை செயற்பாடுகளை மேம்படுத்தி வாழும் கலையாக மிளிர விடவேண்டிய தேவை உள்ளதனால் இதனை உணர்ந்து ஆய்வாளர்களும் கலைஞர்களும் செயற்படுதல் அவசியமாகும்.

                         உசாத்துணை நூல்கள்
01)பேராசிரியா மௌனகுரு.சி, மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் மட்டக்களப்பு, 1998
02)தேனகம் சஞ்சிகை, மட்டக்களப்பு பிரதேசசெயலகம்-2003
03)உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு மடல்05, மூன்றாவது கண் மார்கழி 2005            
                                         யோ.நிசந்தராசன்
                                         நாடகமும் அரங்கியலும் (சிறப்புக்கற்கை)
                                         விடுகை வருடம்.