இனம், மொழி, மதம், தேசம், விருப்பு, வெறுப்பு கடந்து எழுதப்படுவது மட்டுமே உண்மையான வரலாறு - ஜெ. கோபிநாத் Myspace Scrolling Text Creator

ஓம்படைக்கிளவி பற்றிய விளக்கமும், இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களில் ஓம்படைக்கிளவியும்.

அறிமுகம்
  வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய உதவும் மூலாதாரங்களில் சாசனங்கள் முதன்மையானதாகக் காணப்படுகின்றன. அவை எழுதப்பட்டக் காலத்துக்குரிய நிகழ்ச்சிகளைப் பிரதிபலிப்பவை. இலக்கிய சான்றாதாரங்களைக் காட்டிலும் சாசனங்கள் நம்பக்கத்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றன.
காரணம் இலக்கியங்களைப் போல நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தி நயம்படக் கூறுகின்ற மரபு கல்வெட்டுக்களில் காணப்படுவதில்லை.

அது முக்கியமான செய்திகளை மட்டும் கூறுகின்ற தனித்துவமான மூலாதாரங்களாக அமைந்து விடுகின்றன. இவ்வாறான சாசனங்கள் வாயிலாக சமகால சமுதாய அமைப்பு, பொருளாதாரம், தொழில், கல்வி, நிர்வாகம் முதலான பல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது. 

புராதன காலம் முதலாக இலங்கைத்தீவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த பாரத தேசத்தில் ஏறத்தாள 75,000 ற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. அதிலும் தென்னிந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. தமிழகத்திலே 30,000 வரையான கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழிக் கல்வெட்டுக்களாகும். புராதன காலத்தில் கல்வெட்டுக்களை எழுத பயன்படுத்தப்பட்ட எழுத்து பிராமி எனப்படுகிறது. பிராமி சாசனங்களின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி வரையாகும். இக்காலப்பகுதிக்குறிய பிராமி சாசனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் பெருந்தொகையில் கிடைக்கின்றன. இலங்கையிலே 2000 ற்கும் மேற்பட்ட பிராமி சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக முனைப்பு பெற்றுள்ள தொல்பொருள் ஆய்வுகளினால் அவை படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் துறவிகளுக்கு வழங்கப்பட்ட தானதர்மங்களைப் பற்றியதாகும். இலங்கையின் புராதனமான வரலாறு, தமிழர்களுடைய வரலாறு பற்றி சரியாகப் புரிந்துகொள்ள சாசனங்கள் பற்றிய அறிவும் விளக்கமும் இன்றியமையாத ஒன்றாகும். ஈழமண்டலத்திலே பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரை எழுதப்பட்ட தமிழ்ச்சாசனங்கள் பற்றிய விளக்கங்களை ஒரே நூலில் தருகின்ற வகையில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் எழுதிய இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்ற நூல் தனிச்சிறப்பானது. அந்த வகையில் ஈழத்தமிழர்களுடைய வரலாறு பற்றிய திருப்புமுனையான உண்மைச்செய்திகள் பலவற்றை இலங்கைத் தமிழ்ச் சானங்களைப் படிப்பதன் ஊடாக அறிய முடிகிறுது.
கல்வெட்டு அமைப்பு முறை

    வரலாற்று மூலததாரங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்ற கல்வெட்டுக்களின் அமைப்புமுறை பொதுவாக மேல்வரும் பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

1)    தொடக்கச் சொல் அல்லது மங்களச் சொல்
2)    கல்வெட்டின் காலக்குறிப்பு
3)    நோக்கம்
4)    முடிவுச் சொல் அல்லது ஓம்படைக்கிளவி

இவ்வாறான நான்கு அம்சங்களைத் தாங்கியதாக கல்வெட்டுக்கள் காணப்பட்டாலும் ஆரம்ப காலக் கல்வெட்டுக்களில் இந்த நான்கு அம்சங்களையும் காணமுடியாது. ஆதியான பிராமிச் சானங்களில் பெரும்பாலானவற்றில் செய்தி மாத்திரமே காணப்படுகிறது. எனினும் ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு பெரும்பாலான சாசனங்களில் இந்த அம்சங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்களச் சொல்லை சோழர்களுடைய சாசனங்களிலே காணலாம். அதற்கு முந்தைய கால சாசனங்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீ என்ற சொல் மங்களச் சொல்லாக எழுதப்பட்டிருந்தது. விஜயநகர பேரரசுக் காலத்திலே சிவமஸ்து சுபமஸ்து முதலான சொற்கள் தொடக்கச் சொல்லாக வருகின்றது. இலங்கையிலே 12 ஆம் நூற்றாண்டு விஜயபாகு மன்னன் காலத்து பொலன்நறுவைக் கல்வெட்டொன்றிலே நமே புத்தாய நம என்ற மங்களச் சொல் பௌத்தசமயத்தோடு தொடர்பு பட்டதாக வருகிறது. இவ்வாறு இலங்கையிலே மங்களச்சொற்களை அமைக்கும் முறை சோழர்களுடைய செல்வாக்கினாலே ஏற்பட்டுக் கொண்டது.

    சோழர் காலம் முதலாக கல்வெட்டின் தொடக்கச் சொல்லுக்கும் காலக்;குறிப்பிற்கும் இடையில் மெய்க்கீர்த்தி என்ற புதிய அம்சம் புகுந்து கொண்டது. இது மன்னர்களுடைய புகழை எடுத்தியம்புவதாக அவர்களுடைய சாதனைகள், கைப்பற்றிய பிரதேசங்கள், விருதுப் பெயர்கள் என்பவற்றைச் சுமந்ததாக அமைந்து விடுகின்றன.

கல்வெட்டுக்களின் அமைப்பு முறையிலேஇறுதியாக அமைந்திருக்கும் அம்சம் முடிவுச்சொல் அல்லது ஓம்படைக்கிளவி என்பதாகும். ஓம்படைக்கிளவி என்பதன் பொருள் ஓம்பும் படியாகக் கூறப்படும் சொல் என்பதாகும். குறித்த கல்வெட்டின் தர்மத்தை யார் பாதுகாக்க வேண்டும் என்றோ அல்லது யார் பாதுகாப்பில் விடப்படுகிறது என்றோ இந்த ஓம்படைக்கிளவி வாசகங்கள் கூறுகிறது. அத்துடன் கூறப்பட்ட தர்மத்தைத் தொடர்ந்து யார் செய்ய வேண்டும், அவ்வாறு தொடர்ந்து செய்தால் ஏற்படுகின்ற நன்மைகளும், செய்யாது போனால் ஏற்படக்கூடிய தீமைகள், பாவங்கள்; பற்றியும் அதிலே கூறப்பட்டிருக்கும். குறித்ததொரு தானம் பின்வருவோரால் குறையின்றி தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பதற்காகாவும், வழங்கப்பட வேண்டிய தானங்களை தொடர்ந்து யாருமே பாதுகாக்காத நிலையிலும் அவற்றை மேற்கொள்ளச் சொல்லி வேண்டுவதன் நிமித்தமும் ஓம்படைக்கிளவிகள் அமைக்கப்படும். அத்துடன் தானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளச் சொல்வோருக்கு அச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தும் வண்ணமாகவும் ஓம்படைக்கிளவி வாசகங்கள் சாசனங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சில வாசகங்கள் இழிவான சொற்களையும் கருத்துக்களையும் கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக் கல்வெட்டுக்களில் காணப்படும் ஓம்படைக்கிளவி வாசகங்கள் சிலவற்றை உதாரணமாகப் பார்க்கலாம்.

'... இது பன்மாகேஸ்வரர் ரட்ஷை'
'....இவ்வறம் வைஸ்ணவ ரட்ஷை'
'....அறம் மறவற்க'

மேற்கூறப்பட்டுள்ள வாசகங்கள்; தர்மத்தை சிவனடியார்கள் பாதுகாக்க வேண்டுமென்றும் மற்றையது தர்மத்தை வைஸ்ணவ அடியார்கள் பாதுகாக்க வேண்டுமென்றும், தர்மத்தை செய்ய மறக்கக் கூடாது என்றும் கூறுகிறது.

'...இத்தர்மம் ரட்ஷித்தால் அடி என் தலை மேழின'
'...இத்தர்மம் ரட்ஷித்தால் அடி என் முடி மேழின'
'...இவ்வறம் காத்தான் அடி நித்தம் என் சென்னி மேழின'

மேற்கூறப்பட்டுள்ள வாசகங்கள்; தர்மத்தைக் காப்பவர்களுக்கு ஏற்படும் சிறப்புக்கள் பற்றி கூறுகின்றது. தர்மத்தைக் காப்பவர்களுடைய திருவடியை என் தலையில் வைத்து போற்றுவதாக என்று வாசகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

'...இதற்கு அகிதம் செய்தவர்கள் கங்கையிடை குமரியிடை செய்தார் செய்த பாவத்திடை போகக் கடவாராக'
'...கங்கைக் கரையில் காராம்பசுவையும் மதாபிதாவையும் குருவையும் கொன்ற      பாவத்திற் போகக் கடவார்'
'...கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் போகக் கடவார்'
'...இது இறக்குவான் ஏழான் நரகத்துக் கீழான் நரகம் போவான்'
'...இது மாறுவான் தன் தாய்க்கு மினாளன் ஆவான்'
'...இது மாறுவான் பிரம்மஹஸ்தி தோசம் கொள்வான்'
'...இது மாறுவான் புள்ளிடும் பரையனுக்குத் தன் மினாட்டியைக் கொடுப்பான்'
'...காமக் கோட்டம் அழித்தார் அழித்த பாவத்திலே போகக் கடவாராக'

மேற்கூறப்பட்டுள்ள ஓம்படைக்கிளவி வாசகங்கள்; தர்மத்தைப் பாதுகாக்காமல் விடுகின்றவன் எப்படியான இழிவானவன் என்றும் அவனுக்கு எவ்வாறான பாவங்கள் வந்து சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தலாக ஓம்படைக்கிளவிகள் எழுதப்படுவதன் நோக்கம் தர்மம் என்றென்றும் நிலைபெற வேன்டும் என்பதற்காகவேயாகும். இவ்வாறான வாசகங்கள் அனைத்தும் ஆண்களையே விழித்துக் கூறுகின்றமையினால் அவர்களிடமே தானங்கள் பொறுப்பாக்கப்பட்டமையை உணரலாம்.


இலங்கைத்தமிழ்ச் சாசனங்களில் காணப்படும் ஓம்படைக்கிளவி வாசகங்கள்

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்னும் நூலிலே ஏறத்தாள 67 ற்கும் மேற்பட்ட சாசனங்கள் தொடர்பாக விளக்கியுள்ளார். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிவரை எழுதப்பட்டவையாகும். இலங்கையில் காண்டுபிடிக்கப்பட்ட இவ்வாறான சாசனங்களில் 15 சாசனங்களில் ஓம்படைக்கிளவி வாசகங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஏனைய சில கல்வெட்டுக்கள் முடிவுப் பகுதி சிதைவுற்றிருப்பதனால் அவற்றிலே வாசகங்கள் அழிவுற்றிருக்கலாம்.

        பொலன்நறுவையிலே சோழர் காலத்தில் கட்டப்பட்ட வானவன்மாதேவி ஈஸ்வரத்திலுள்ள இரண்டு சாசனங்களிலும் திருகோணமலை வரலாற்றைக் கூறும் சாசனங்களில் முதன்மையானதாக விளங்கும் நிலாவெளிக் கல்வெட்டிலும் '... இது பன்மாகேஸ்வரர் ரட்ஷை'  என்று முடிவுச் சொல் அமைக்கப்பட்டுள்ளன. தானம் பற்றிய செய்திகளைக் கூறியபின்னர் இந்த தர்மம் சிவனடியார்களின் பொறுப்பாக விடப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். இதையொத்த ஓம்படைக்கிளவி வாசகங்கள் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளிலும் வருகின்றன.

திசையாயிரத்து ஐநூற்றுவர் அல்லது நானாதேசிகள், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார் போன்றோர் சாசனம் வாயிலாக அறியமுடிகின்ற வணிககணங்களாவார்கள். தமிழகத்திலும் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் பலவற்றில் இவர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இவர்களுள் திசையாயிரத்து ஐநூற்றுவர் அதிக செல்வாக்கைப் பெற்றவர்கள். இவர்கள் படைபலங்களைக் கொண்டிருந்ததோடு இவர்கள் மட்டுமே சாசனங்களில் மெய்க்கீர்த்தியை அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். சோழரின் ஆட்சியதிகார விஸ்தரிப்புகளுக்கு ஐநூற்றுவரின் பங்களிப்பும் முக்கியமானதாக அமைந்திருந்தது என்பது அன்மைக்கால ஆய்வுகளினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வணிக கணங்களின் குடியிருக்கள் வீரபட்டிணங்கள் எனப்படுகின்றன. தமிழகத்திலே 11ஆம் நூற்றாண்டு முதலாக வீரபட்டிணங்களைப் பற்றிய சாசனக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இலங்கையிலே 12ஆம் நூற்றாண்டில் தான் வீரபட்டிணங்கள் உருவாகியிருந்தன. இவ்வாறான வணிக கணங்களின் குடியிருப்புக்களான வீரபட்டிணங்களைப் பற்றிய சாசனங்களே வீரசாசனங்கள் எனப்படுகின்றன. வீரசாசனங்களிலே வீரபட்டிணங்கள் அமைக்கப்பட்டமை பற்றிய செய்திகள் அமைந்துள்ளன.

இலங்கையிலே வீரபட்டினங்களைப் பற்றிய வீரசாசனங்கள் இதுவரை ஆறு அடையாளங் காணப்பட்டுள்ளன. அவை பதவியா, வாஹல்கட, விஹாரேஹின்ன, புதுமுத்தாவ, தெதியமுல்லை, கல்தம்பிட்டிய என்னும் இடங்களில் உள்ளன. வாஹல்கட வீரசாசனம் நானாதேசிய வீரபட்டினம் பற்றிய செய்திகளை பதிவு செய்கிறது. பதவியாவிலுள்ள நீளமான வீரசாசனம் அங்கிருந்த ஐம்பொழில் பட்டினம் பற்றியதாகும். விஹாரேஹின்னவிலுள்ள கல்வெட்டு தன்மசாகரப்பட்டினம் பற்றியது. புதுமுத்தாவைச் சாசனம் விக்கிரமசலாமேகபுரம் என்னும் வணிக நகரத்தைப் பற்றியது. கல்தம்பிட்டி, தெதியமுல்லை போன்ற இடங்களிலும் வீரசாசனங்கள் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகளுண்டு.

இந்த ஆறு வீரசாசனங்களிலும் ஓம்படைக்கிளவி வாசகங்கள் ஒரே விதமாக அமைந்துள்ளன. சாசனங்கள் அனைத்திலும் 'அறமறவற்க' என்று முடிக்கும் வாசகம் அமைந்துள்ளது. கூறப்பட்ட தர்மத்தை மறக்கக் கூடாது, அதனை மறக்காமல் தொடர்ந்து செய்ய வேண்டும், என்றவாறு அது அமைந்துள்ளது.
அநுராதபுரத்திலே ஒன்பதாம் நூற்றாண்டுக்குறிய சாசனமொன்று இந்துசமய நிறுவன அழிபாடுகளுக்கு நடுவே கண்டெடுக்கப்பட்டது. இதுவே நான்கு நாட்டார் கல்வெட்டு எனப்படுகிறது. மாக்கோதைப் பள்ளி என்னும் நிறுவனம் தொடாப்பாக நான்கு நாட்டார் என்னும் குழுவினரால் ஏற்படுத்ப்பட்ட அறக்கட்டளையின் விபரங்கள் அதிலே வருகின்றன. இக்கல்வெட்டின் ஒம்படைக்கிளவி வாசகம் '..இத்தர்மத்தினுக்குத் தீங்கு நின்றார் காக்கையும் நாயுமாவார்'; என்றவாறு அமைகிறது. குறிப்பிடப்பட்ட மாக்கோதைப்பள்ளி தொடர்பான தர்மத்திற்கு தீங்கு நின்றவர்கள் மறுபிறப்பிலே காக்கையாகவும் நாயாகவும் பிறவியெடுப்பார்கள் என்று அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

முதலாம் விஜயபாகு அமைத்த தளதாய்ப்பெரும்பள்ளியின் அருகில் அமைந்த வேளைக்காறரின் சாசனம் வரலாற்று மூலமென்ற வகையில் பல சிறப்புக்கள் பொருந்தியது. இது பொலன்நறுவையில் கண்டுபிடிக்கப்பட்டது. வேளைக்காறப்படையினர் பற்றிய பல விபரங்கள் அதில் அடங்கியுள்ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களில் வருகின்ற ஓம்படைக்கிளவிகளில் ஒப்பீட்டளவில் பெரிய வாசகங்களைக் கொண்டிருப்பது இந்த பொலன்நறுவை வேளைக்காற சாசனமாகும். வேளைக்காறருக்குப் பொறுப்பாக்கப்பட்ட அறம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து ஓம்படைக்கிளவி வாசகம் மேல்வருமாறு அமைந்துள்ளது.
        'இப்படி திறம்புவானும் திறம்பச் சொல்லுவானும்
        திறம்பச் சம்மதிப்பானும் மாதந்திரத்திற்குப் பிழைத்த
        படைப்பகைஞன் பஞ்சமஹாபாதகஞ் செய்தானும்
       தேவர் பூதர் மாதவத்தோர்க்குக் குடுத்தன கொள்ளும் கொடும்பாவியும்
       புத்த ஸங்க ரத்நங்களுக்குப் பிழைத்தாரும்
       புகுந் நரகம் புகுவார் அறமறவற்க ஸ்வஸ்திஸ்ரீ'

    கூறப்பட்ட தர்மத்தை செய்யாமல் மாறுவானும் மாறச்சொல்லுவானும் அதற்கு சம்மதம் தெரிவிப்பவனும் மாதந்திரம் என்று சொல்லப்படுகின்ற பெறிய படையிலே பிழை செய்த படை சேவகனும் ஐந்து விதமான குற்றங்களையும் செய்த பாதகனும் தேவர்கள் மானிடர்கள், பூதத்தவர்கள் ஆகியோருக்கு பாதகஞ் செய்யும் கொடும்பாவியும் புத்த தர்ம சங்க நெறிகளை மீறியவர்களும் செல்லுகின்ற நரகத்தை அடைவார்கள். எனவே அறத்தை மறக்கலாகாது என்று கூறப்படுகிறது. தர்மத்தைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக அவற்றை செய்யாது விட்டால் அவர்கள் எவ்வாறான நரகத்தை அடைவார்கள் என்று அச்சுறுத்தலாக ஓம்படைக்கிளவி வாசகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    வடமத்திய மாகாணத்திலே தம்மன் கடவையிலே மோறகஹவெல     என்னும் ஊரிலே ஒரு தமிழ்ச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது. கஜபாகு தேவரின் காலத்திற்குறிய இச்சாசனம் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குறிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. பௌத்த நிலையமொன்றுக்கு உலகாயகித்தன் என்பவன் ஒரு வேலி நிலத்தை தானமாக வழங்கியமையை சாசனம் விபரிக்கின்றது. இச்சாசனத்தின் ஓம்படைக்கிளவி மேல்வருமாறு அமைந்துள்ளது.
            ' என்னிற் பின்பு இத்தர்மம் அழித்தானொருவன்
            மூன்று கோயிலும் அழித்தானாவான்
            மூன்று கைக்கும் பிழைத்தானாவான்
            தன் தாய்க்கு ஆசைப்படுவான்தன்னால் வழங்கப்பட்ட தானத்தை தனது சுற்றத்தார் அனுசரித்து போக வேண்டுமென்றும் தனக்குப்பின் அந்த தர்மததைக் காக்காமல் அதற்கு விரோதம் செய்பவர்கள் பௌத்த சமயத்தின் மும்மணிகளான புத்தர், தர்மம், சங்கம் ஆகிய மூன்றுக்கும் விரோதம் இழைத்தவராகிறார்கள், மூன்றுகை எனப்படுகின்ற வேளைக்காறரின் படைக்கு குற்றமிழைத்தவராகிறார்கள், தன்னைப் பெற்ற தாயை ஆசைப்பட்டு அடைய நினைப்பவர்கள் என்று உலகாயகித்தன் கூறுவதாக தன்மை நிலையில் முடிவுப்பகுதி அமைந்துள்ளது. வேளைக்காற சாசனங்களில் வேளைக்காற மாசேனையை மூன்றுகை என்று எழுதப்படுவனைக் காணவாம். மூன்று கோயில் என்பது இங்கு குழூக்குறியாக பரிசுத்தமான புத்தர், தர்மம், சங்கம் என்ற மூன்றையே குறிப்பிடுவதாக பேராசிரியர் சி. பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். இந்த சாசன வாசகத்தில் தர்மம் பிழைத்தவன் தன் தாய்கே ஆசைப்படுவான்  என்று கூறப்பட்டுள்ளமை தர்மம் கட்டாயம் காக்க வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது. எனினும் நாகரிகமற்ற சொற்பிரயோகங்கள் ஓம்படைக்கிளவிகளில் அமைந்திருப்பதற்கு இச்சாசனத்தின் மேலே சொன்ன வாக்கியம் தக்க சான்றாகும்.

    ஹிங்குறாங்கொடையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குறிய வரிவடிவிலமைந்த தமிழ்ச் சாசனமென்று கிடைத்துள்ளது. இச்சாசனம் கஜபாகு தேவரோடு தொடர்புடைய அகம்படி என்கின்ற பிரிவினரில் ஒருவனாகிய உம்பிழ அயித்தன் என்பவன் ஜீவிதமாகிய தன் நிலத்தை விற்று புத்தஸ்தானம் ஒன்றுக்கு தானமாக வழங்கிய செய்திகளை பதிவு செய்கிறது. சாசனத்தின் முடிவில் 'இதற்கு விக்நம் செய்வாருண்டாகில் புத்த ஸ்தானத்திற்கு பிளைச்சாராவார், நரகம் புகுவார்' என்று வசனம் எழுதப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்;கு விரோதமிழைப்பவர்கள் பௌத்த நிலையத்திற்கும் நெறிகளுக்கும் பிழை செய்த பாவத்தைப் பெறுவார்கள், நகரத்தையும் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சாசனத்தில் நகர, னகர மற்றும் ளகர, ழகர வழுக்கள் இடம்பெற்றுள்ளது. சாசனங்களில் இவ்வாறான இலக்கண வழுக்கள் இடம்பெறுவது இயல்பான ஒன்றாகும்.

    கஜபாகு காலத்து தான சாசனமொன்று பொலன்நறுவைக்கு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சாசனம் பொலன்நறுவையிலுள்ள பௌத்த பள்ளியொன்றுக்கு வழங்கப்பட்ட தானமொன்றைப் பற்றியது. இச்சாசனத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைவடைந்து காணப்படுவதால் விபரங்களை தெளிவாக வரலாற்றாய்வாளர்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.  ஜயபாகு, கஜபாகு ஆகிய அரசர்களைப் பற்றிய செய்திகளையும் ஆதித்த மஹாதேவன் என்பவனைப் பற்றிய செய்திகளையும் சாசனம் மூலமாக அறிய முடிகிறது. அத்துடன் புலைநரியான விஜயராஜபுரம் பற்றியும் அங்குள்ள பௌத்த பள்ளி பற்றியும் அதற்கு 102 காசு தானமாக வழங்கப்பட்டமை பற்றியும் தெளிவாக விபரங்கள் காணப்படுகின்றன. இதன் முடிக்குஞ்சொல்

'....இக்காசு வாங்கி அழித்தாருண்டாகில் ஸ்ரீ ஆஞ்சை மறுத்தாராவார்'

என்று அமைந்துள்ளது. அதாவது காசினை வாங்கி அந்த தர்மத்தை செய்யாமல் அநீதி செய்தவர்கள் அரச கட்டளையை, சத்தியத்தை மீறியவர்களாவார்கள் என்பதாகும். பொதுவாக சாசனங்களில் ஓம்படைக்கிளவிகள் கடவுளர், புத்தர், மும்மணிகள், புனித தலங்கள் என்பவற்றோடு தொடர்புடையதாக அமையும். ஆனால் இச்சாசனத்தில் மாறாக அரச கட்டளையை மீறியவர்கள் என்று திருவாணையோடு தொடர்பு படுத்தி கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ஜயபாகுவின் 24 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று மகாகிரித்தேகம என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றது. அது ஜெயங்கொண்ட சலாமேக சதுர்வேதிமங்கலத்திற்கு வழங்கப்பட்ட தானத்தினைப் பதிவு செய்கிறது. இந்தக் கல்வெட்டின் முதலாம் முகத்தின் இறுதி வரியிலும் இரண்டாம் முகத்தின் ஆறு வரிகளிலும் ஓம்படைக்கிளவி வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

    '...யிதனுக்கஹிதம் செய்வாருண்டாகிற் ஜென்மாந்திரத்து
நரகத்திற் பிறவி பெறுவார் வல்லவரையன் சூழறவு'

என்பது இக்கல்வெட்டின் முடிவுப் பகுதியாகும். இந்த கோயில் தர்மத்திற்கு மீறி விரோதமாக செயற்படுபவர்கள் பிறவிபெறுகின்ற ஜென்மம் முழுவதும் நரகத்திலேயே பிறவியெடுத்து அல்லலுறுவார்கள் இது விநாயகர் மீது சத்தியம் என்பதாக அது அமைந்துள்ளது. வல்லவர் என்பது விநாயருடைய 32 நாமங்களிலொன்று. அறவு என்பது சத்தியம் செய்தல் என்பதைக் குறித்து நிற்கிறது.

திருகோணமலை மாவட்டம் மாங்கனாய் என்ற இடத்தில் மிக முக்கியமான தான சாசனமொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது ஜயபாகுவின் 42ஆவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டது. கஜபாகு மன்னன் வெய்கவேரம் என்னும் விகாரத்திற்கு பூமிதானம் செய்ததை மானாபரணனுடைய பணிப்பில் மிந்தன் கொற்றன் என்ற கண்கானி சிலாலேகம் செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. பரபக்கிரமபாகுவின் ஆட்சிக்கு முன்னர் நடைப்பெற்ற மகாவம்சம் கூறும் செய்திகளை இது உறுதிப்படுத்துகிறது. அதன் முடிக்கும் சொல் மேல்வருமாறு அமைந்துள்ளது.
    '...இதுற்கு ஒரு விக்னஞ் செய்(ய)
    (லெஞ்று)மை திப் புத்தராஞ்ஞை
    வல்லவரையன் சூளறவு'
இந்த அறத்திற்கு விரோதம் செய்யக்கூடாது என்று புத்தபெருமான் மீது ஆணை, விநாயகர் மீது சத்தியம் என்று அமைந்திருக்கிறது. இந்த ஓம்படைக்கிளவி வாசகத்தின் சிறப்பு என்னவென்றால் புத்தராஞ்ஞை, வல்லவரையன் சூளறவு என்று வருவதாகும். ஒரே சாசனத்தில் இந்து பௌத்த சமய கடவுளரின் மீது சத்தியம் செய்வதாக ஓம்படைக்கிளவி அமைந்திருப்பது இச்சாசனத்தில் மட்டும் தான் என்பது முக்கியமானதாகும். வடகிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் பௌத்தரிடையே இந்து சமயம் ஏற்படுத்தியிருந்தச் செல்வாக்கினை இது பிரதிபலிக்கிறது.

முடிவுரை
கல்வெட்டு அமைப்புக்களில்     ஓம்படைக்கிளவி வாசகங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றினூடாக கல்வெட்டு யாரால் அமைக்கப்பட்டது, யார் பாதுகாப்பில் விடப்படுகிறது, போன்ற பல முக்கியமான விடயங்களை அறியமுடிகிறது. இலங்கைத்தமிழ்ச் சாசனங்களில் 16 ற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் ஓம்படைக்கிளவிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு தொடர்பான அறிவும் விளக்கமும் எமது வரலாற்றை அறிந்து பொள்ள இன்றியமையாத ஒன்றாகும். எனவே கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் அவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் வரலாற்று மாணவர்களும், ஆசிரியர்களும், ஏனையோரும் அறிவைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமானதாகும். அதன் மூலமாக பாரபட்சமற்ற நடுநிலையான வரலாற்றை நிரூபிக்க முடியும்.

ஜெ கோபிநாத்
வரலாற்றுத் துறை